ஆர்ப்பாட்டம்

சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்கக்கோரி சேரன்மாதேவியில் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-09 21:45 GMT

சேரன்மாதேவி:

திருச்செந்தூர்-பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிராஞ்சேரி- கல்லிடைக்குறிச்சி இடையே சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 5-ந்தேதி பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்க பணியின்போது பழமையான மரம் சரிந்து ஆட்டோ மீது விழுந்ததில் டிரைவர் மற்றும் பெண் ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பின்னர் 2 மாதங்களாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

எனவே சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் செல்வம், துணைத்தலைவர் பர்னபாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் அகமது மைதீன், துணைத்தலைவர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. தொகுதி செயலாளர் சிந்தாகொடி வரவேற்று பேசினார்.

நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை செயலாளர் சத்யா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேலு, அம்பை தொகுதி செய்தி தொடர்பாளர் சுதாகர் கந்தசாமி, எஸ்.டி.பி.ஐ. புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான், அ.தி.மு.க நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்