சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஏமனூரில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-02 16:26 GMT

ஏரியூர்:

ஏமனூரில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீரில் புழுக்கள்

ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சி ஏமனூரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அது இடிந்து விடும் நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த குடிநீரில் புழுக்கள் வருவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுகாதாரமற்ற குடிநீரை குடித்த இந்த கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஏரியூர், பென்னாகரம், சேலம் உள்ளிட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இந்த கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்