ஏற்காடு
ஏற்காட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. ஏற்காட்டில் பெரும்பாலான கிராமங்களில் நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மலை கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் ஏற்காடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகராஜா கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அவர் பேசும் போது, 'ஏற்காட்டில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மலை கிராம மக்களும், சுற்றுலா பயணிகளும் மின்சாரம் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து மலை கிராமங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழக்க வேண்டும். மின் பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். ஏற்காட்டில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் மின்விளக்கு அமைக்கவேண்டும்' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஏற்காடு ஒன்றிய செயலாளர் நேரு, 'இனிவரும் காலங்களில் மின் வெட்டை சரி செய்ய தாமதப்படுத்தினால் மின்வாரிய அலுவலகம் முன்பு ஏற்காட்டில் உள்ள அனைத்து கிராம மக்களையும் திரட்டி பெரிய அளவில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்' என்றார்.