ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்தும், உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்ற காரணத்தினால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று கூறி நால்வர் விடுதலைக்கான கூட்டமைப்பினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
வக்கீல் பரத்முத்தையா தலைமை தாங்கினார். பச்சை தமிழகம் கட்சி நிர்வாகி உதயகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பீட்டர், தமிழ்த்தேசிய பேரியக்க நிர்வாகி தமிழ்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முருகன் கண்ணன், திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி மாடத்தி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.