காவிரி ஆற்றில் ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசிடம் வலியுறுத்தி பெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வக்கீல் நல்வினை விஸ்வராஜூ போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடலில் கலந்து வீணாகும் மேட்டூர் அணையின் உபரிநீரை நாமக்கல் மாவட்ட ஏரிகளில் நிரப்பும் வகையில் காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு-அய்யாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், குட்டை மற்றும் வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பத்து ரூபாய் இயக்கத்தின் ஆலோசகர் காந்தியவாதி ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.