காவிரி கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இடித்து அகற்றம் உரிமையாளர்கள்- போலீசாருக்கு இடையே வாக்குவாதம்

உரிமையாளர்கள்- போலீசாருக்கு இடையே வாக்குவாதம்

Update: 2022-11-02 19:30 GMT

கொடுமுடி காவிரி கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டது அதன் உரிமையாளர்களுக்கும், போலீசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காவிரி கரையை ஆக்கிரமித்து கடைகள்

பல ஆண்டுகளாக காவிரிக்கரையை ஒட்டிய பகுதிகள் மற்றும் காவிரி கரையில் தனியார் பரிகார மையங்கள் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நீர்நிலை புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே கொடுமுடி காவிரி கரை பகுதிகளில் நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் பரிகார மையங்கள் இயங்குவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றன. அதன்பேரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்ற பொதுப்பணித்துறைக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இடித்து அகற்றம்

இதைத்தொடர்ந்து கொடுமுடி காவிரி கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் பரிகாரம் மையங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கொடுமுடியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்ற பொக்லைன் எந்திரத்தோடு ஈரோடு ஆர்.டி.ஒ. சதீஷ்குமார், கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் உஷாராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயராஜ், பிரபாகரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் செந்தில்குமார், வசந்தா, பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு காவிரி கரை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் பரிகார மையங்கள் இடித்து அகற்றப்பட்டன.

அப்போது கடை உரிமையாளர்கள் மற்றும் போலீசார் இடையே ஆங்காங்கே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பு அகற்றுவதை அதிகாரிகள் நிறுத்தவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்