பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றம்
கோத்தகிரி அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
கோத்தகிரி,
கடந்த ஆண்டு நெல்லையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து, அதனை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, கோத்தகிரியில் 65 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பள்ளி விடுமுறை நாட்களில், மற்றொரு பழைய கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பள்ளி வளாகத்தில் இருந்த மற்றொரு பழைய கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்டிடத்தை தொழிலாளர்கள் இடித்து அகற்றி வருகின்றனர்.