சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடித்து அகற்றம்
அன்னூர் அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பாதுகாப்பாக இடித்து அகற்றினர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே காட்டம்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப் பட்டது. அது 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.
அந்த தொட்டியை தாங்கி நிற்கும் 4 தூண்களும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால் மேல்நிலை தொட்டி இடிந்து கீழே விழும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கிராம சபை கூட்டங்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரிடம் மனு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மேல்நிலைநீர் தேக்க தொட்டியை ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பாதுகாப்பாக இடித்து அகற்றினர். மேலும் அந்த பகுதியில் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.