அனுமதியின்றி கட்டிய விடுதி இடிப்பு

உப்பட்டி அருகே அனுமதியின்றி கட்டிய விடுதியை இடித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-12-03 18:45 GMT

பந்தலூர், 

உப்பட்டி அருகே அனுமதியின்றி கட்டிய விடுதியை இடித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. இதன் கீழ் வரும் நிலங்களில் அரசின் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டக்கூடாது. இதற்கிடையே பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே சேலக்குன்னு பகுதியில் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலத்தில் அனுமதி இல்லாமல் விடுதி கட்டப்பட்டு வந்தது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் சிலர் புகார் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து கலெக்டர் உத்தரவின்படி, பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் எவ்வித அனுமதியும் பெறாமல் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் நிலத்தில் கட்டிடம் கட்டுவது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் கட்டிடம் கட்ட தடை விதித்தனர். மேலும் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

கட்டிடம் இடிப்பு

இந்தநிலையில் மீண்டும் கட்டுமான பணி நடைபெறுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கட்டுமான பணியை நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து கீழே தள்ளினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அனுமதி இல்லாமல் மீண்டும் கட்டிடம் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்