தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி2-வது நாளாக சாலை மறியல்

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-01-13 17:47 GMT


திருவண்ணாமலையில் தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கஞ்சா போதை

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கல்நகர் சுடுகாடு பகுதியில் கஞ்சா போதையிலும், மது போதையிலும் அவ்வபோது சிலர் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 9-ந் தேதி இரவு வேலைக்கு சென்று வீட்டு கல்நகர் சுடுகாடு வழியாக முகல்புறா தெருவை சேர்ந்த நசீர் மற்றும் இம்தீயாஸ் ஆகியோர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சுடுகாடு பகுதியில் போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தகராறில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக் கோரி கடந்த 10-ந் தேதி கம்மங்கொல்லை தெரு, முகல்புறா தெரு, நபிநாயகன் தெருவை சேர்ந்த இஸ்லாமிய பொதுமக்கள் கோபால் தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இம்தீயாஸ் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

2- வது நாளாக சாலை மறியல்

ஆனால் அவர்களை நேற்று வரை கைது செய்யப்படவில்லை. அதனால் தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி 2-வது நாளான நேற்று மீண்டும் கோபால் தெருவில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற போராட்டத்தினால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் இது குறித்து தவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 2 நாட்களில் தகராறில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விடுவதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்