அரசு விரைவு பஸ்களில் வாரம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க கோரிக்கை

அரசு விரைவு பஸ்களில் வாரம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-14 12:17 GMT

தூத்துக்குடி எம்பவர் அமைப்பின் கவுரவ செயலாளர் சங்கர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பான சேவையை பயணிகளுக்கு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் இப்பேருந்துகளில் வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சென்னை – நாகர்கோவில் செல்ல திங்கள் முதல் வியாழன் வரை சாதாரண கட்டணமும், வெள்ளி முதல் ஞாயிறு வரை கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் தான், பெரும்பாலான நுகர்வோர்கள் பயணம் செய்கின்றனர். இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பது நேர்மையற்ற வணிக நடைமுறையாகும். மக்களுக்கான ஜனநாயக அரசு இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் வருத்தத்துக்கு உரிய விஷயம் ஆகும். தனியார் ஆம்னி பஸ்களில் கூட பண்டிகை தினங்களில் மட்டுமே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகையால் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் வாரம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்