புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
புதிய பஸ் நிலையம்
சேலம் வடக்கு மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சசிகுமார், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகள், கார், சைக்கிள்கள் நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். புதிய பஸ் நிலைய வளாகத்தில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பூட்டப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகள் கழிவறையை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தற்காலிக கடைகள்
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அமருவதற்காக பஸ் நிலைய வளாகத்தில் இருக்கை வசதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் திருட்டு போய் உள்ளன. குப்பை தொட்டிகளையும் காணவில்லை. பஸ் நிலைய வளாகத்திற்குள் சட்டவிரோதமாக பல இடங்களில் வைக்கப்பட்டு உள்ள ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளை அப்புறப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது பெயரளவுக்கு கடைகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தற்காலிக கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.