தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய கோரிக்கை

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-26 18:47 GMT

பெரம்பலூரில், மாவட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:- கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். மேலும் அந்த நீர்த்தேக்கம் வழியாக விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு பாதையை விரைந்து அமைத்து தர வேண்டும். இல்லையெனில் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டத்தில் சின்னமுட்லு அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கல்லாறு, சின்னாறு ஆகியவைகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றி, தூர்வாரி சீரமைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி கழகம் அமைத்து பருத்தியையும், மக்காச்சோளத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.45 வழங்க வேண்டும். 50 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும்.

தொண்டப்பாடி, பாலையூர், நெய்குப்பை, வேப்பந்தட்டை, செங்குனம், மேலப்புலியூர், கீழப்புலியூர், ஆதனூர், கொட்டரை, மூங்கில்பாடி ஆகிய கிராமங்களில் தானிய உலர் களம் அமைத்து தரவேண்டும். சின்ன வெங்காயம், நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் மற்றும் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை ஆகியவை விவசாயிகளுக்கு மானிய திட்டங்களை தெரியப்படுத்துதல் வேண்டும். விவசாய மின் இணைப்பு கால தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் ராமதாஸ் உள்பட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்