கடை உரிமையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி

கடை உரிமையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-06 18:17 GMT

திருத்துறைப்பூண்டி:

கடை உரிமையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கடியாச்சேரி மெயின் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் சிங்காரவேலு. இவரது கடைக்கு நேற்று முன்தினம் பள்ளங்கோவிலை சேர்ந்த சுதாகர், பெரிய கொத்தமங்கலத்தை சேர்ந்த பிரவீன், நாலாநல்லூரை சேர்ந்த இளங்கோ ஆகிய 3 பேர் வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை டீக்கடைக்கு அருகில் கடை வைத்துள்ள புகாரி மற்றும் அந்த கடையில் வேலை பார்க்கும் இஸ்மாயில் மற்றும் மற்றொரு கடை உரிமையாளர் பிங்களன் உள்ளிட்டோர் அந்த 3 பேரிடமும் ஏன் இப்படி தகராறு செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த அந்த 3 பேரும் புகாரி, இஸ்மாயில், மற்றும் பிங்களன் ஆகிய 3 பேரையும் தாக்கியதோடு அவர்கள் கடையையும் அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் 3 பேரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடைகள் அடைப்பு

இந்த சம்பவம் வியாபாரிகளிடையே பரவியது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், வணிகர்களுக்கு பாதுகாப்பு கேட்டும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டி கடியாச்சேரி, பள்ளங்கோவில் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடை உரிமையாளர்களை தாக்கிய 3 பேரையும் கைது செய்யக்கோரி பள்ளங்கோவில், கடியாச்சேரி வர்த்தக சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் சேக்தாவுது உள்ளிட்டோர் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் சுதாகர் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்