விவசாய நிலங்களை அளவீடு செய்வதில் காலதாமதம்
உப்புக்கோட்டை பகுதியில் விவசாய நிலங்களை அளவீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்கிபட்டி, உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, கூழையனூர், மஞ்சிநாயக்கன்பட்டி ஆகிய 5 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் கோடாங்கிபட்டி நிலஅளவையர் மூலம் அளவீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் உப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் விளைநிலங்களை அளவீடு செய்வதற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் நிலங்களை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து நிலஅளவையரிடம் கேட்டால் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளிப்பதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலங்களை விரைந்து அளவீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.