தென்மேற்கு பருவமழை தாமதம்: பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் குறைந்தது- விவசாயிகள் கவலை

தென்மேற்கு பருவமழை தாமதம் ஆவதால் பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-30 01:30 GMT

பொள்ளாச்சி

தென்மேற்கு பருவமழை தாமதம் ஆவதால் பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பி.ஏ.பி. அணைகள்

ஆனைமலை குன்றுகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாயும் ஆறுகளான ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு மற்றும் பெருவாரிபள்ளம் ஆறு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் நீரினை கிழக்கு நோக்கி திருப்பி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாசனம் செய்யப்படுகிறது. மேலும் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளாவில் 22 ஆயிரம் ஏக்கரும் நேரடியாக பயன்பெறுகின்றன. இதை தவிர கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த திட்டம் உள்ளது.

இந்த திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்குபருவமழையின் காரணமாக முழுகொள்ளளவை எட்டும். அதன் தொடர்ச்சியாக ஜூலை மாதத்திற்குள் பெரும்பாலும் தொகுப்பு அணைகள் உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி விடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரைக்கும் பருவமழை பெய்ய தொடங்கவில்லை. சாரல் மழை மட்டும் அவ்வப்போது பெய்து வருகிறது.

நீர்மட்டம் குறைகிறது

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி சோலையார் அணை 160 அடி கொள்ளளவில் 109.65 அடியும், பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவில் 44.85 அடியும், ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவில் 88.20 அடியும் இருந்தது. ஆனால் நேற்று சோலையார் 12 அடியும், பரம்பிக்குளம் 19 அடியும், ஆழியாறு 56.65 அடியும் உள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி சோலையாறும், 18-ந்தேதி பரம்பிக்குளமும், ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி ஆழியாறு அணையும் முழுகொள்ளளவை எட்டின.

இந்த ஆண்டு மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆழியாறு அணையில் உள்ள பாலங்கள், பாறைகள், சாலைகள் வெளியே தெரிந்து குட்டை போன்று காட்சி அளிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து முன்னாள் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:-

மானாவாரி பயிர்கள் கருகின

தென்மேற்கு பருவமழையை நம்பி மானாவாரி பயிர்களான சோளம், நிலக்கடலை போன்றவற்றை பயிரிடப்பட்ட உள்ளன. வடக்கிபாளையம், புரவிபாளையம், சென்னியூர் பகுதிகளில் அரசாணிக்காய் மானாவாரி பயிராக தான் பயிரிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் மானாவாரி பயிர்கள் கருகி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு பி.ஏ.பி. பாசனத்திற்கு உரிய நீர் கிடைப்பது கேள்விகுறியாகி விடும். அதே நேரத்தில் ஆகஸ்டு மாதத்தில் மழை பெய்ய தொடங்கி, அணைகள் நிரம்பிய அனுபவங்களும் உள்ளன. எனவே மழை பெய்து அணைகள் நிரம்பும் என்கிற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்