முதிர்ந்த ரப்பர் மரங்களை அகற்றி விட்டு மறுநடவுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம்

குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள ரப்பர் தோட்டங்களில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மறுநடவு செய்ய அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஆவதால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்து வருகின்றனர்.

Update: 2023-08-21 20:17 GMT

குலசேகரம், 

குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள ரப்பர் தோட்டங்களில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மறுநடவு செய்ய அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஆவதால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்து வருகின்றனர்.

தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம்

குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1979-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் சுமார் 12,600 எக்டர் தனியார் விளை நிலங்கள் வரையறை செய்யப்பட்டன. இந்தநிலையில் 2011-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டர் தனியார் காடுகளாக வரையறை செய்யப்பட்ட விளைநிலங்களில் புதிய பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தார். இதனால் விவசாயிகள் தங்களின் நிலங்களை உரிமை மாற்றம் செய்யவோ, வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறவோ, வாரிசுகளுக்கு பாகம் பிரித்து கொடுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்றி விட்டு மறு நடவு செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டது.

வனக்குழுவினரிடம் அனுமதி...

இதைஎதிர்த்து விவசாயிகள் மற்றும் மக்கள் பிரிதிநிதிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து 2015-ம் ஆண்டு தனியார் காடுகளாக வரையறை செய்யப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை உரிமை மாற்றம் செய்தல், முதிர்ந்த மரங்களை வெட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு மாவட்ட வனக்குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் விவசாயிகள் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்றி விட்டு மறுநடவு செய்ய அனுமதி கேட்டு மாவட்ட வனக்குழுவுக்கு விண்ணப்பம் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அனுமதி வழங்க சுமார் 1 ஆண்டு வரை ஆகிறது என்றும், இதனால் ரப்பர் மரங்களை உரிய காலத்தில் மறு நடவு செய்ய முடியவில்லையெனவும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நேரடியாக ஆய்வு

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

தனியார் காடுகள் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள தோட்டங்களில் ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மறுடவு செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட வனக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பம் செய்யும் போது, அந்த விண்ணப்பதாரரின் ரப்பர் தோட்டத்தை வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்துறை ஆகிய 3 துறைகள் நேரடியாக ஆய்வு ெசய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை தரவேண்டும். இதில் வேளாண்துறை விரைவாக செயல்பட்டு, தனது அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் இதர 2 துறைகளும் விரைவாக செயல்படுதில்லை

மேலும் இந்த 3 துறைகளின் அறிக்கைகள் மாவட்ட கலெக்டருக்கு சென்ற பின்னர், மறு நடவு செய்வதற்கு மாவட்ட வனக்குழு உத்தரவு பிறப்பித்தும், அதை விவசாயிகளுக்கு கொடுக்காமல் 2 மாதங்கள் வரை அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் கடும் இன்னல்களுக்கும், அவதிக்கும் ஆளாகின்றனர்.

நடவடிக்கை தேவை

எனவே மாவட்டத்தில் தனியார் காடுகளாக வரையறை செய்யப்பட்டுள்ள ரப்பர் தோட்டங்களில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு காலம் கடத்தாமல் உத்தரவுகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்