4, 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கிடைப்பதில் தாமதம்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 4, 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மன உளைச்சல் அடைவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Update: 2022-09-28 18:45 GMT

பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 4, 5-ம் வகுப்புக்கு முதல் பருவ பொதுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் முழுவதும் 4-ம் வகுப்பு படிக்கும் 8 ஆயிரத்து 200 மாணவர்களும், 5-ம் வகுப்பு படிக்கும் 8 ஆயிரத்து 600 மாணவர்களும் மாநில அரசின் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வுக்கான வினாத்தாள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு மூலம் குறுந்தகடுகளாக தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனை வினாத்தாள்களாக அச்சிட்டு மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேற்கொள்கிறார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய தமிழ் பாடத்திற்கான வினாத்தாள்களை ஞாயிற்றுக்கிழமை மாலை ஒவ்வொரு வட்டார வள மையத்தின் பொறுப்பாளர்களை நேரில் வரவழைத்து அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்திலிருந்து பிரித்து வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுச்செல்லும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் குருவள மைய பொறுப்பாளர்களிடம் வினாத்தாள்களை பள்ளிக்கூடம் வாரியாக பிரித்து அனுப்பினர். முதல் நாள் தேர்வு தொடங்கும் நேரமான காலை 9:30 மணிக்கு சரியாக மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

வினாத்தாள்களை ஜெராக்ஸ் எடுத்தனர்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆங்கில பாடத்திற்கான வினாத்தாள்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடம் காலை 9 மணி அளவில் வழங்கப்பட்டது. மேலும் வினாத்தாள்கள் சரியான எண்ணிக்கையில் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனையடுத்து குருவள மைய பொறுப்பாளர்கள் எந்தெந்த பள்ளிகளுக்கு எத்தனை வினாத்தாள்கள் தேவை என்பதை கணக்கிட்டு தனியார் ஜெராக்ஸ் கடைகளில் நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கினர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கணித பாடத்திற்கான வினாத்தாள் சரியான நேரத்திற்கு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் மையங்களுக்கு அனுப்பப்படாததால் நேற்று மதியம் வரை மாவட்டம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் தேர்வுகள் தொடங்கப்படவில்லை. அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய மையங்களில் இருந்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடம் காலை 10:30 மணி அளவில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

மதியம் 3 மணிக்கு...

தா.பழூர் வட்டாரத்திற்கு உள்ள வினாத்தாள் தொகுப்பில் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வழி கல்வி வினாத்தாள்களும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் வழி கல்வி வினாத்தாள்களும் நேற்று வராததால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் அந்த வினாத்தாள்கள் ஜெயங்கொண்டம் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கும்போது மதியம் 12 மணி ஆகிவிட்டது. அந்த வினாத்தாள்கள் குருவலம் மைய பொறுப்பாளர்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்போது மதியம் 2½ மணி வரை ஒவ்வொரு பள்ளியாக கொண்டு சேர்க்கப்பட்டது. இதனால் காலை 9.30 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய தேர்வுகள் மதியம் 3 மணிக்கு தொடங்கப்பட்டன. காலையில் தேர்வு எழுதுவதற்கு ஆர்வத்துடன் சுறுசுறுப்பாக வந்த மாணவ-மாணவிகள் வினாத்தாள் தாமதமாக கிடைக்கப்பெற்றதால் மதியம் வரை தேர்வு எழுத முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

பெற்றோர் வேண்டுகோள்

இதுகுறித்து கல்வி அலுவலர்களிடம் கேட்டபோது, அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்கள் ஒட்டுமொத்தமாக அச்சடிக்கப்பட்டு தேர்வு தொடங்குவதற்கு முதல் நாளிலேயே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் வகையில் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இதுபோன்ற நிர்வாக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்காது. ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் வினாத்தாள்களை தேர்வு நடைபெறும் அன்று காலை சென்று பெற்று வருவதால் வினாத்தாள்களில் பிழைகள் ஏதாவது உள்ளனவா, வினாத்தாள்கள் சரியான எண்ணிக்கையில் இருக்கிறதா? என்பதை குறித்து உறுதி செய்ய முடிவதில்லை, என்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பெற்றோர்கள், வினாத்தாள்களை வட்டார கல்வி அதிகாரிகள் எப்போது பெற்று வந்தாலும், தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நாட்களில் சரியான நேரத்தில் தேர்வு நடத்துவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் அதேநேரத்தில் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்டத்திலும் நேற்று இதே நிலை இருந்தது. இதுகுறித்து பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், 4, 5-ம் வகுப்புகளுக்கு தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து தான் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது.

கணித தேர்வு வினாத்தாள் அச்சடிக்க தாமதமானதால், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு நேற்று வழக்கமான நேரத்தை விட தாமதமாக வினாத்தாள் வந்தடைந்தது. இதனால் பள்ளிகளில் 4, 5-ம் வகுப்புகளுக்கு கணித தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது, என்றனர். மேலும் ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ஏற்கனவே இருந்த நடைமுறையில் 4, 5-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நடைமுறையினால் தினமும் குறு வள மையத்துக்கு சென்று வினாத்தாள்கள் பெற்று பள்ளிக்கு செல்வது சிரமமாக இருக்கிறது, என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்