நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.2.84 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட்;கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல்
2023-24-ஆம் நிதியாண்டிற்காக நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.2 கோடியே 84 லட்சத்துக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசினார்.
நாகர்கோவில், ஏப்.1-
2023-24-ஆம் நிதியாண்டிற்காக நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.2 கோடியே 84 லட்சத்துக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசினார்.
மாநகர பட்ஜெட் தாக்கல் கூட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி 2023-24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் மற்றும் கவுன்சில் கூட்டம் நேற்று வடசேரியில் உள்ள புதிய மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், முத்துராமன், செல்வகுமார், மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள் மீனாதேவ், நவீன்குமார், உதயகுமார், செல்வம், ஸ்ரீலிஜா, அனிதா சுகுமாரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஆணையர் ஆனந்த் மோகன், மேயர் மகேஷிடம் வழங்கினார். அதனை மேயர் மகேஷ் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாநகரில் சாலை வசதி, தெரு விளக்கு, கழிவு நீர் ஓடை அமைத்தல், குடிநீர் வினியோகம் ஆகியவற்றிற்கு அனைத்து வார்டுகளுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், பூங்கா சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சொத்து வரி உயர்வு, புதிய கட்டிடங்களுக்கான சொத்து வரி மூலமாக கூடுதல் வருவாய் கிடைக்கும்.
ரூ.23 லட்சத்திற்கு உரங்கள் விற்பனை
பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 52 வார்டுகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகள் தற்போது 93 சதவீதம் முடிவடைந்துள்ளது.
மாநகர பகுதிகளில் ஏற்படும் குறைகள் குறித்து மக்கள் மேயரின் முகாம் அலுவலக வாட்ஸ்-அப் எண் 9487038984 மூலமாக தெரிவிக்கலாம். தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சி.எல்.சி. மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் திடக்கழிவு மேலாண்மையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 11 நுண்ணுயிர் உரமாக்கல் மையங்கள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை ஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் வீதம் இதுவரை ரூ.23,77,247 விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 685 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 ஆயிரத்து 964 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 17 ஆயிரத்து 682 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேசிய நகர்புற சுகாதார குழுமம் திட்டத்தின் மூலம் பெருவிளை பகுதியில் உள்ள அரசு நகர்ப்புற சுகாதார நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசாணை பெறப்பட்டு, கட்டிடம் இந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
சபையார் குளம், சுப்பையார்குளம், நீராடி குளம், செம்மங்குளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி நீர் ஆதாரங்களை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகர மக்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டே மாநகராட்சி செயல்படுகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.2¾ கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட்
வருவாய் மற்றும் மூலதன நிதியாக இந்த ஆண்டு ரூ.234 கோடியே 98 லட்சம் வருவாய் கிடைக்கிறது. குடிநீர் மற்றும் வடிகால் நிதி மூலமாக ரூ.17 கோடியே 67 லட்சம் நிதி கிடைக்கிறது. அதன்அடிப்படையில் இந்த 2023-24-ம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.252 கோடியே 64 லட்சம் நிதி கிடைத்துள்ளது. அதேசமயம் வருவாய் மற்றும் மூலதன செலவாக ரூ.239 கோடியே 57 லட்சமும், குடிநீர் மற்றும் வடிகால் செலவாக ரூ.15 கோடியே 91 லட்சம் என மொத்தம் ரூ.255 கோடியே 48 லட்சம் செலவு ஆகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ரூ.2 கோடியே 84 லட்சம் பற்றாக்குறை பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.