சேவை குறைபாடு: பெண்ணுக்கு ரூ.12¾ லட்சத்தை தனியார் வங்கி திருப்பி கொடுக்க வேண்டும் கடலூர் மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு

சேவை குறைபாடு ஏற்பட்டதால் பெண்ணுக்கு ரூ.12¾ லட்சத்தை தனியார் வங்கி திருப்பி கொடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2023-06-08 18:45 GMT

காட்டுமன்னார்கோவில் அருகே மேலநெடும்பூரை சேர்ந்தவர் நடனசபாபதி. இவருடைய மனைவி புலமைச்செல்வி (வயது 56). இவர்கள் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்று கடலூரில் உள்ள தனியார் டிராக்டர் டீலரிடம் கடந்த ஆண்டு டிராக்டர் வாங்கினர். பிறகு மற்றொரு டீலரிடம் அறுவடை எந்திரம் வாங்கினர். ஆனால் டிராக்டர் டீலர் நிறுவனம் வாகன பதிவை 2 மாதத்திற்கு காலம் தாழ்த்தியது. கடனை 8 சமமான மாத தவணைகளில் செலுத்த வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் கடன் வழங்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு தான் முதல் தவணை செலுத்த வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் அவர்கள் டிராக்டரை எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாத நிலையில், முதல் தவணையை கட்ட வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி முதல் தவணை கட்டிய நிலையில், 2-வது தவணை கட்டவில்லை. இதையடுத்து வங்கி நிர்வாகம் டிராக்டருடன், அறுவடை எந்திரத்தையும் சேர்த்து பறிமுதல் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட புலமைச்செல்வி கடலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில் நேற்று தீர்ப்பு கூறினர். அதில், சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக வங்கி நிர்வாகம், டிராக்டர் டீலர் ஆகிய 2 நிர்வாகமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இது தவிர அறுவடை எந்திரம் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்தை வங்கி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்