அவினாசி
அவினாசி புதுப்பாளையம், தெக்கலூர், கோதப்பாளையம், ராயபாளையம் சங்கமாங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த மான்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அவினாசி நகர்ப்புறங்களுக்கு அவ்வப்போது வருகின்றன. இந்த நிலையில் நேற்று அவினாசியை அடுத்து ராயம்பாளையம் சங்கமாங்குளம் அருகே 2 வயதுடைய ஆண் மான் ஒன்று இரை தேடிவந்துள்ளது.
அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் மானை பார்த்ததும் அதை துரத்தி சுற்றி வளைத்து கடித்துக்குதறி உள்ளது. இதில் மானின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதியைச்சேர்ந்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து மானை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக செத்தது.
-