பட்டாசு வெளிச்சத்தில் இருள் நீங்கிய வானம்: ஈரோட்டில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்- நண்பர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்

ஈரோட்டில் தீபாவளியையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் ஒளியில் இருள் வானம் வெளிச்சமானது. நண்பர்கள் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி பலரும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

Update: 2022-10-25 21:39 GMT


ஈரோட்டில் தீபாவளியையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் ஒளியில் இருள் வானம் வெளிச்சமானது. நண்பர்கள் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி பலரும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

தீபாவளி உற்சாகம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் கடந்த 23-ந் தேதியே விழா களை கட்ட தொடங்கியது. தீபாவளிக்கு முந்தைய நாளே விடுமுறை என்பதால் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து தீபாவளியை கொண்டாட தொடங்கினார்கள். இரவில் பட்டாசுகள் வெடித்தும், வாணவேடிக்கைகள் விட்டும் மகிழ்ந்தனர்.

பலரும் தங்கள் பிறமத நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் இனிப்பு, காரம், பட்டாசுகள் கொடுத்து தங்கள் அன்பையும் தீபாவளி வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

மதவேறுபாடு இன்றி அனைவரும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

பட்டாசு

நேற்று முன்தினம் அதிகாலையிலேயே வீடுகளில் தீபாவளி கொண்டாட்டத்தின் உற்சாகம் களைகட்ட தொடங்கியது. காலையில் ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்கும் சத்தம் அனைத்து பகுதிகளிலும் கேட்டது. தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதும், வாழ்த்துகளை பரிமாறுவதுமாக இருந்தது. வீதியோர மக்களுக்கு பலரும் உணவு வழங்குவதை பார்க்க முடிந்தது.

காலை மற்றும் இரவில் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை என்று இருந்தாலும், ஆங்காங்கே பகல் முழுவதும் பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

சிறுவர்-சிறுமிகள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள்.

இருள் வானத்தில் வெளிச்சம்

இரவில் 7 மணி முதல் 8 மணிவரை பட்டாசுகள் வெடிக்க நேரம் அளித்து இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் பரபரப்பாக சரவெடிகள் அனைத்து இடங்களிலும் வெடிக்கப்பட்டன. வாண வேடிக்கைகள், புஸ்வாணங்கள், மத்தாப்புகள், தரை சக்கரங்கள் என்று பல வண்ண பட்டாசுகள் வீதிகளை வெளிச்சமாக்கின. வாண வேடிக்கைள், ராக்கெட்டுகள் வானத்தில் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததால் இருண்ட வானம் பலவண்ண ஒளி ஓவியமாக வெளிச்சமாக இருந்தது.

நேற்றும் விடுமுறை என்பதால் காலையில் இருந்தே ஆங்காங்கே சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். ஈரோட்டில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்