ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் தீபா, தீபக் பதில் அளிக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
வருமான வரி மற்றும் செல்வ வரி தொடர்பாக ஜெயலலிதாவிற்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளுக்கு அவரது வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1995-ம் ஆண்டு வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது திருமண அலங்காரத்திற்காக 59 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை அவர் செலவு செய்ததாக கூறி, அந்த தொகையை 1996-1997-ம் ஆண்டு ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சேர்த்து வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிட்டார்.
ஆனால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 12 எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து இந்த செலவை செய்தனர். அதாவது அவர்கள் திருமண அலங்காரத்துக்காக ரூ.57 லட்சம் செலவு செய்தனர் என்று ஜெயலலிதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மீண்டும் விசாரணை
இதை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை ஆணையர், ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கை புதிதாக மதீப்பீடு செய்ய உத்தரவிட்டார். இதன்படி புதிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கலை இயக்குனர் தோட்டா தரணி, அவரது உதவியாளர்களிடம் மதிப்பீட்டு அதிகாரி விசாரணை நடத்தியபோது, இந்த அலங்கார செலவை ஜெயலலிதாதான் செய்தார் என மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் அந்த செலவை ஜெயலலிதாவின் வருமான கணக்கில் சேர்த்து மதீப்பீட்டு அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை ரத்து செய்தது.
செல்வ வரி
இதேபோல சுதாகரன் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகள் கொடுக்கப்பட்டது. இந்த தொகையை ஜெயலலிதாவின் வருமானத்தில் சேர்த்து மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை ரத்து செய்தது.
அதேபோல 1997-1998-ம் ஆண்டுகளில் செல்வ வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை. இதுதொடர்பாக வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அந்த உத்தரவையும் ரத்து செய்தது.
தீபா, தீபக்
இவ்வாறு வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து பிறப்பித்த 3 உத்தரவுகளையும் எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு 3 வழக்குகள் தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டதால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் இந்த வழக்குகளுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.