ராமலிங்க பொத்தையில் தீப தரிசனம்
செங்கோட்டை ராமலிங்க பொத்தையில் தீப தரிசனம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை ரெயில் நிலையம் அருகே அருள் ஆனந்தமலை (ராமலிங்க பொத்தை) அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு இருமுறை ஆவணி அமாவாசை மற்றும் மாசி அமாவாசை நாட்களில் வடலூர் ராமலிங்க வள்ளலார் வழியில் அருட்பெரும்ஜோதி வழிபாடும், அன்னதானம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாசிமாத அமாவாசை தினமான நேற்று தீப தரிசனம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
காலை 7 மணிக்கு அருள் ஆனந்த செந்தில் விநாயகா் பூஜை, 8 மணிக்கு கூழ் வழங்குதல், 9 மணி முதல் 12 மணி வரை ராமலிங்க வள்ளலார் அருளிய அருட்பா அகவல் பாராயணம், 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சன்மார்க்க பக்தி சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு மங்கள பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சிதம்பர சுவாமிகள் சன்மார்க்க தொண்டா்கள் குலத்தின் பொறுப்பாளா்கள் சண்முகசுந்தரம், விஜயசங்கர், சிவசிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனா்.