அணைகளின் நீர்மட்டம் சரிவு

Update: 2023-08-21 19:30 GMT

பழனி அணைகள்

பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகள் அமைந்துள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். இந்த அணைகள் பழனி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி பகுதியின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக உள்ளன.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் பழனி அணைகள் முழுகொள்ளவை எட்டியது. அதைத்தொடர்ந்து குடிநீர், பாசனத்துக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கடும் வெயில் நிலவுவதாலும் பழனி அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நீர்மட்டம் சரிவு

பாலாறு-பொருந்தலாறு அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் குடிநீர், பாசனத்துக்காக வினாடிக்கு 24 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் 65 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 34.6 அடியாக சரிந்துள்ளது.

அதேபோல் 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணையில் 62 அடி வரை தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், மழை இல்லாததால் எல்லா அணைகளுக்கும் நீர்வரத்து இல்லை. எனினும் பழனி, ஆயக்குடி பகுதியின் குடிநீர் தேவைக்கு போதிய அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்