தட்டுப்பாடின்றி உரம் வழங்க தீர்மானம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-10-06 20:16 GMT

பேராவூரணியில் உள்ள ஒரு அரங்கில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒருங்கிணைந்த ஒன்றியக்குழு கூட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பேராவூரணி ஒன்றியத் தலைவர் பாலசந்தர், ஒன்றியச் செயலாளர் பின்னவாசல் சிதம்பரம் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

உரம்

கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய பணிகளுக்கு யூரியா உள்ளிட்ட உரங்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகளிடம் இடுபொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. தனியார் உரக்கடைகளில் உரங்கள் விலையை உயர்த்தியும், வேறு இடுபொருட்கள் வாங்கினால் தான் உரம் தருவோம் என்று நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர், வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தள்ளுபடி தொகை

ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கரும்பு கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி தொகையை சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஒப்புக்கொண்டபடி அடுத்த மாதம்(நவம்பர்) 29-ந் தேதிக்குள் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்க வேண்டும். பாங்கராங்கொல்லை-பினவாசல் இணைப்பில் ஆதனூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும். அதேபோல், மணக்காடு காட்டாறு வடக்கு கரை சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக பராமரிப்பின்றி உள்ளது. எனவே, அந்த சாலையை செப்பனிட்டுத் தர வேண்டும். இந்த இரு சாலைகளையும் 400 ஏக்கர் பாசன நிலப்பரப்புக்கான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்