கேரளா, கர்நாடகா மாநிலங்களில் விசாரணை நடத்த முடிவு

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்து உள்ளனர். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2022-06-24 15:08 GMT

ஊட்டி, 

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்து உள்ளனர். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-4-2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கு குறித்து கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இந்தநிலையில் நேற்று ஊட்டி மகளிர் கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், வாளையாறு மனோஜ், சதீசன், உதயகுமார், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜித்தின் ராய், பிஜின் ஆகிய 9 பேர் ஆஜராகினர். தீபு மட்டும் ஆஜராகவில்லை. மேலும் நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வரும் வாளையாறு மனோஜ் மற்றும் தனபால், ரமேஷ் ஆகியோர் தரப்பில், நிபந்தனை ஜாமீனை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் கூறும்போது, வழக்கில் இதுவரை 257 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து உள்ளனர். கேரளாவுக்கு சென்று சயானின் வாகன விபத்து குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது.

தனிப்படை போலீசார்

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது கர்நாடக மாநிலத்திற்கு தகவல் பரிமாற்றம் நடைபெற்று இருப்பது தெரியவந்து உள்ளது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரிக்க அந்த மாநில காவல்துறையின் உதவியை கேட்க தனிப்படை போலீசார் முடிவு செய்து உள்ளனர் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்