தாட்கோவில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடன் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-08-28 16:16 GMT

தர்மபுரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடன் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உச்சவரம்பு உயர்வு

தர்மபுரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு ஏற்கனவே குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடையும் வகையில் ஆண்டு வருமான உச்சவரம்பு தற்போது ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தாட்கோ கடன் மற்றும் நலத்திட்டங்களை பெற ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் http://application.tahdco.com என்ற இணையதளம் முகவரியிலும், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரி முகவரியிலும் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

மானியம்

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 109 பேருக்கு ரூ.8 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 109 டிராக்டர்கள் வாங்க மானியமாக ரூ.2 கோடியே 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. புதிய பால் பண்ணை அமைத்தல், ஆடை தயாரிக்கும் நிறுவனம் அமைத்தல், சுற்றுலா வாகனங்கள் வாங்குதல், புதிய கிணறு அமைத்தல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி உள்பட மொத்தம் 153 பேருக்கு ரூ.11 கோடியே 18 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3 கோடியே 28 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்