விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-05-15 12:18 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்த 11 பேர் இதுவரை உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில் மரக்காணம் எக்கியர்குப்பத்தில் கள்ளச் சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆபிரகாம் (48) என்பவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்