பெண்ணுக்கு கொலை மிரட்டல்
கூடலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 2 பேர் கைது.
கூடலூர் அருகே உள்ள சாமாண்டிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (30). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் நந்தினி கோபித்துக் கொண்டு கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் நந்தினியின் சகோதரர் இன்பகுமார் (29) அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த இன்பகுமார் நந்தினியை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது இன்பகுமாரை கீழே தள்ளிவிட்டு அருகில் உள்ள வீட்டில் நந்தினி ஒளிந்து கொண்டார். இதற்கிடையே அங்கு வந்த அவரது கணவர் சுரேசும், இன்பகுமாருடன் சேர்ந்து நந்தினிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அவர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேசன் வழக்குப்பதிந்து சுரேஷ், இன்ப குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.