கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம்:
திருவண்ணாமலையில் இருந்து நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ், அதனூர் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், அதனூர் பஸ் நிறுத்தம் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த அதனூர் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறினார். அதற்கு ஓம்பிரகாஷ், தமிழ்வாணன் உள்ளிட்டோர், கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமாரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர், கொடுத்த புகாரின் பேரில் ஓம்பிரகாஷ், தமிழ்வாணன் ஆகிய இருவரின் மீதும் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.