கிணத்துக்கடவில் போலீசாருக்கு கொலை மிரட்டல்;ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது

கிணத்துக்கடவில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-30 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை மிரட்டல்

கிணத்துக்கடவில் கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சர்வம் தியேட்டர் அருகே கடந்த 19-ந் தேதி இரவு ஆட்டோ டிரைவர்கள் வாய் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, போலீஸ்காரர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர்.

அப்போது அங்கிருந்த கிணத்துக்கடவு ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான கிருஷ்ணசாமிபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், ஆனந்தன், செந்தில்குமார் ஆகிய 3 ஆட்டோ டிரைவர்களும் கிணத்துக்கடவு போலீஸ்காரர் பிரபாகரனை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனர்.

3 பேர் கைது

மேலும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தலை மறைவாகினர். இதுகுறித்து கிணத்துக்கடவு பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த 3 ஆட்டோ டிரைவர்களும் பழனி பஸ் நிலையத்தில் பதுங்கி இருப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கிணத்துக்கடவு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான போலீசார் பழனி பஸ் நிலையத்தை ரகசியமாக நோட்டமிட்டு அங்கு பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஆனந்த் (வயது 36), கார்த்திகேயன் (32), செந்தில்குமார் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

இதில் ஆனந்தும், கார்த்திகேயனும் அண்ணன், தம்பி ஆவர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கிணத்துக்கடவு போலீசார் பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து நீதிபதி, கைது செய்யப்பட்ட 3 பேரையும் 15 நாட்கள் கோர்ட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் 3 பேரும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்