காதல் மனைவிக்கு கொலை மிரட்டல்
நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் காதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
சிவகாசி அருகே உள்ள ஊராம்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர் முருகன் மகள் தாமரைச்செல்வி (வயது 19). இவர் அம்மாபட்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் அஜித்குமார் (23) என்பவரை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். காதல் தம்பதி ஊராம்பட்டியில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் தாமரைச்செல்வியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அஜித்குமார் அவரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தாமரைச்செல்வி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாமரைச்செல்வி மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.