விருத்தாசலம் அருகேதிருமணம் செய்ய வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்வாலிபர் கைது
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியை வழிமறித்து திருமணம் செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கம்மாபுரம்,
தொழிலாளி
விருத்தாசலம் அருகே உள்ள இருப்புக்குறிச்சியை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் ஜான்பால் (வயது 30). தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒருவருடைய வீட்டில் கூலி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஜான்பால் தான் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளரின் 18 வயது மகளான என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலிப்பதாக அப்பகுதி மக்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த மாணவியின் தாய், ஜான்பாலின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி அவரை வேலைக்கு வர வேண்டாம் என கூறிவிட்டார்.
இதற்கிடையே மாணவியின் தந்தை செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், உன் மகளுடைய புகைப்படமும், அவர் என்னுடன் பேசிய ஆடியோவும் இருப்பதாகவும், அதனை சமூக வலைதளத்தில் வெளியிட இருப்பதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கொலை மிரட்டல்
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை என்ஜினீயரிங் மாணவி, கல்லூரி நேரம் முடிந்ததும் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
இருப்புக்குறிச்சி அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்ற போது, அங்கு வந்த ஜான்பால், மாணவியை வழிமறித்துள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று கூறி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் ஊமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்பாலை கைது செய்தனர்.