பர்கூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து வனவர் பலி

Update: 2023-06-26 19:30 GMT

கிருஷ்ணகிரி:

பர்கூர் அருகே குழந்தைகளின் காதணி விழாவுக்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பியபோது ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து வனவர் பலியானார்.

குழந்தைகளுக்கு காதணி விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சாலிநாயனப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். வெங்கடேசன் தனது 3 குழந்தைகளுக்கு வருகிற 2-ந்் தேதி காதணி விழா நடத்த ஏற்பாடு செய்து இருந்தார். இதற்காக அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசன் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு இரவு ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது வெங்கடேசன் நிலை தடுமாறி ஸ்கூட்டருடன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் காதணி விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்த வனவர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்