தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 2-ம் வகுப்பு மாணவன் பலிஆற்றை கடக்க முயன்ற போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சோகம்

Update: 2023-06-18 19:00 GMT

காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றை கடக்க முயன்ற 2-ம் வகுப்பு மாணவன் ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி பலியானான். அவனது உடல் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

பள்ளி மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவர் பண்ணந்தூரில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ரிஷிதரன் (வயது 7). இவன் பண்ணந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சகாதேவன் செல்லக்குட்டப்பட்டியில் இருந்து பண்ணந்தூருக்கு தென்பெண்ணை ஆற்றை கடந்து சென்று வருவது வழக்கம். சில நேரங்களில் ஆற்றை கடந்து பண்ணந்தூர் கடைக்கு செல்லும் போது மகன் ரிஷிதரனையும் அவர் அழைத்து செல்வார்.

கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி.அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் செல்கிறது.

தேடும் பணி

இதனால் சகாதேவன் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேறு வழியாக பண்ணந்தூரில் உள்ள கடைக்கு சென்றார். இதற்கிடையே தந்தை தன்னை கடைக்கு அழைத்து செல்லாமல் விட்டு சென்றதை அறிந்த ரிஷிதரன் கடைக்கு செல்ல முடிவு செய்தான். இதையடுத்து மதியம் 12 மணி அளவில் வழக்கம்போல் தந்தை அழைத்து செல்லும் தென்பெண்ணை ஆற்றை கடக்க முயன்றான்.

அப்போது ரிஷிதரன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். வீட்டில் மகன் இல்லாததை அறிந்த சகாதேவன் அவனை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவன் கிடைக்காததால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இரவில் மழை பெய்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

உடல் மீட்பு

இதை தொடர்ந்து நேற்று காலை போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி மற்றும் பாரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் மீண்டும் தேடும் பணி நடந்தது. சுமார் 24 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று மதியம் 12 மணிக்கு இறந்த நிலையில் மாணவனின் உடல் மீட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியான மாணவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தையுடன் கடைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து ஆற்றை கடக்க முயன்ற சிறுவன் அடித்து செல்லப்பட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்