காவேரிப்பட்டணம் :
காவேரிப்பட்டணம் அருகே மகனுக்கு பெண் பார்த்து விட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பிய கணவன்-மனைவி சரக்கு ஆட்டோ மோதி பலியானார்கள்.
மகனுக்கு பெண் பார்க்க...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மிட்ட அள்ளி பகுதியில் பாரத கோவிலை அடுத்த மச்சி கண்ணன் நகர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 48), விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பாத்தி (44). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் மகன் மணிகண்டனுக்கு (26) பெண் பார்க்க, காவேரிப்பட்டணம் அருகே உள்ள மணி நகர் கிராமத்திற்கு பச்சையப்பனும், அவருடைய மனைவியும் மொபட்டில் நேற்று முன்தினம் காலையில் சென்றுள்ளனர். அங்கு பெண் வீட்டாரை பார்த்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல அணைரோடு பிரிவு சாலையில் அவர்கள் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.
கணவன்-மனைவி பலி
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த சரக்கு ஆட்டோ தம்பதி சென்ற மொபட்டின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாப்பாத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த பச்சையப்பன் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனுக்கு பெண் பார்க்க சென்றபோது கணவன்-மனைவி சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.