திருப்பூரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு, தங்கையை அழைக்க சென்றபோது டிப்பர் லாரி மோதி மாணவி பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவி பலி
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜ். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கோகிலா. இவர்களுடைய மகள்கள் தனுஸ்ரீ (வயது 15), சாதனா (10). இவர்களில் தனுஸ்ரீ கணியாம்பூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும், சாதனா வஞ்சிபாளையம் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. தேர்வு எழுத தனுஸ்ரீ நேற்று காலை உற்சாகமாக சென்றார். பின்னர் தேர்வு எழுதி முடித்துவிட்டு தனுஸ்ரீ மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தனது தங்கை சாதனாவை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் எதிரே வந்த டிப்பர் லாரி தனுஸ்ரீ ஓட்டிச் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனுஸ்ரீயின் உடலை கைப்பற்றி அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் லாரி டிரைவரை கைது செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு தொடங்கிய முதல் நாள் காலையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு மாலையில் மொபட்டில் சென்றபோது லாரி மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.