அமராவதி ஆற்றில் மூழ்கி விவசாயி பலி

Update: 2023-04-06 16:00 GMT


மடத்துக்குளம் அருகே குளிக்கச்சென்ற விவசாயி அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அமராவதி ஆறு

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 36).தந்தையுடன் இணைந்து விவசாயப் பணிகளை கவனித்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாயார் கீதா மற்றும் தந்தை ராஜாமணியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சுரேஷ்குமார் நேற்று நண்பர்கள் 4 பேருடன் இணைந்து அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் நண்பர்கள் அனைவரும் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியையடுத்த அமராவதி ஆற்றில் குளித்துள்ளனர்.

தீயணைப்புத்துறையினர்

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சுரேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரைக்காப்பாற்ற நண்பர்கள் முயற்சி செய்தும் முடியாமல் ஆற்று நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையம் மற்றும் மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அமராவதி ஆற்றில் மிதவைகள் உதவியுடன் தேடினர்.

நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆற்றில் மூழ்கிய சுரேஷ்குமாரை பிணமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார் சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் ஜாலியாக குளிக்க வந்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்