தனியார் நிறுவன மேற்பார்வையாளர் சாவு
ஓசூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஓசூர்
ஓசூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
தனியார் நிறுவன மேற்பார்வையாளர்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நோமல் திமாரி (வயது 29). இவர் ஓசூர் அருகே பேடரப்பள்ளி கங்கா நகரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவரும், உடன் பணிபுரிந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ் அலி (30) என்பவரும் மோட்டார்சைக்கிளில் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
இந்த மோட்டார் சைக்கிளை நோமல் திமாரி ஓட்டிச்சென்றார். முகமது இலியாஸ் அலி, பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது, அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில், ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த ஜெய்குமார் (45) என்பவர் வந்தார். ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சர்வீஸ் ரோடு பக்கமாக சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும், நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
ஒருவர் சாவு
இந்த விபத்தில் நோமல் திமாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முகமது இலியாஸ் அலி படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதே போல், ஜெய்குமாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் இறந்த நோமல் திமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.