மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

கந்திகுப்பம் அருகே மின்கம்பி மீது மொபட் ஏறியதில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் பிளஸ்-1 மாணவி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-10-16 18:45 GMT

பர்கூர்:

கந்திகுப்பம் அருகே மின்கம்பி மீது மொபட் ஏறியதில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் பிளஸ்-1 மாணவி படுகாயம் அடைந்தார்.

சாலையில் கிடந்த மின்கம்பி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள அழகியபுதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). விவசாயி. இவரது மகள் பிரியா (16). இவர் ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் முருகேசன் ேபாலிநாயனப்பள்ளியில் இருந்து வீட்டிற்கு தனது மகளுடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அழகியபுதூர் பக்கமாக சென்ற போது, மின்சார வயர் அறுந்து சாலையில் விழுந்து கிடந்துள்ளது. அப்போது மொபட் மின் கம்பி மீது ஏறியது. இதனால் தந்தை-மகள் 2 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விவசாயி சாவு

இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் விவசாயி முருகேசன் பரிதாபமாக இறந்தார். மாணவி பிரியா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி மீது மொபட் ஏறியதில் மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்