காட்டுப்பன்றியை வேட்டையாட அமைத்த மின்வேலியில் சிக்கி டிரைவர் பலி-விவசாயி கைது
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட அமைத்தமின்வேலியில் சிக்கி டிரைவர் பலியானார். இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
மின்வேலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சின்ன சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது.
இதில் இருந்து மின்சாரத்தை திருடி, கொட்டாயூரை சேர்ந்த விவசாயி அர்ஜூனன் (வயது 45) மின்வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலி மூலம் அவர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வந்ததாக கூறப்படுகிறது.
டிரைவர் பலி
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கருக்கம்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகனான டிரைவர் சுரேஷ் (25), சூளகுண்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காட்டுப்பன்றியை வேட்டையாட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராத விதமாக மிதித்தார்.
இதனால் சுரேசை மின்சாரம் தாக்கியது. இதில், அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விவசாயி கைது
அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் மின்வேலியில் சிக்கி பலியான சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மின்வேலி அமைத்த விவசாயி அர்ஜூனனை கைது செய்தனர். காட்டுப்பன்றியை வேட்டையாட அமைத்த மின்வேலியில் சிக்கி டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.