ஒப்பந்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

ஒப்பந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-07-07 16:57 GMT

சாயல்குடி, 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உப்பு வாறுவதற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் சிறைக்குளம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முருகன் (வயது46) வேலை பார்த்து வந்தார். நேற்று உப்பு பாத்தியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து முருகனின் உடலுடன் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவல் அறிந்த கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ், சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகத்தரசன், கடலாடி மண்டல துணை தாசில்தார் சாந்தி ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சி.ஐ.டி.யு. மாநில துணைப்பொதுச் செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் சிவாஜி, அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்க தலைவர் பச்சைமால், செயலாளர் குமாரவடிவேல், நிர்வாகிகள் வடிவேல், முருகவேல், காட்டு ராஜா, ஆனந்த்ராஜ், குழந்தைவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முடிவில், முருகன் குடும்பத்துக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாகவும் தெரிவித்ததின் பேரில் 7 மணி நேரமாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டு, அவரது உடலை அங்கிருந்து எடுத்துச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்