மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி உள்பட 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதி தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.
பரமக்குடி,
பார்த்திபனூர் இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது45). இவரது நண்பர் கமுதி தாலுகா முதலங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் (41). 2 பேரும் மானாமதுரையில் கட்டிட வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர். அப்போது பார்த்திபனூர் கல்யாண மகால் அருகே சாலையில் வரும் போது மானாமதுரை தாலுகா வன்னிக்குடி கிராமத்தை சேர்ந்த அங்குசாமி என்பவர் மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்தார். கண்ணன் (53) என்பவர் பின்புறம் அமர்ந்து வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம், கண்ணன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா அங்குசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.