தடுப்பூசி செலுத்திய சிறிது நேரத்தில் தொழிலாளி சாவு

தொண்டியில் சிகிச்சைக்கு சென்று தடுப்பூசி செலுத்திய சிறிது நேரத்தில் தொழிலாளி இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-30 16:16 GMT

தொண்டி, 

தொண்டியில் சிகிச்சைக்கு சென்று தடுப்பூசி செலுத்திய சிறிது நேரத்தில் தொழிலாளி இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட வேலை

தொண்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). கட்டிட சென்ட்ரிங் வேலை தொழிலாளி. இவருக்கு காலில் கம்பி குத்தியதை தொடர்ந்து காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்றுமுன்தினம் இரவு தொண்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஓய்வு பெற்ற டாக்டரிடம் சென்றுள்ளார். டாக்டர் இவருக்கு ஊசி போட்ட சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அந்த டாக்டரும் முருகனின் உறவினர்கள் சிலரும் எதிரே உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று உள்ளனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்த முருகனின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மருத்துவ மனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

கோரிக்கை

அப்போது முருகனின் மனைவி மற்றும் உறவினர்கள் முருகனின் இறப்புக்கு காரணமான டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.முருகனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது அவர்களிடம் தாசில்தார் செந்தில் வேல்முருகன் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையினை தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசின் உதவித்தொகை நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வழக்குப்பதிவு

அதனைத் தொடர்ந்து போலீசார் முருகனின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஓய்வு பெற்ற டாக்டர் மீது தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்