ஒகேனக்கல்லில் காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் சாவுசிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Update: 2023-09-12 19:30 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல்லில் காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் ஜோடி

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள சாமுண்டிபுரா பகுதியை சேர்ந்தவர் மாதேவ். இவரது மகன் உமேஷ் (வயது 24). இவரும், கனகபுராவில் உள்ள கல்லூரியில் பி.யு.சி. முதலாம் ஆண்டு படித்து வரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காதலர்கள் இருவரும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். காதல் ஜோடியினர் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து அவர்கள் தொங்கு பாலத்திற்கு கீழே காவிரி ஆற்றுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று பாறைகளுக்கு இடையே விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தனர்.

வாலிபர் சாவு

காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற பரிசல் ஓட்டிகள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மயங்கி கிடந்த காதல்ஜோடியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது உமேஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல்லில் 16 வயது காதலியுடன் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்