வீரகனூர் அருகே பரிதாபம்முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி சாவுஉடன் சென்ற நண்பரிடம் விசாரணை
தலைவாசல்
வீரகனூர் அருகே முயல் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
முயல் வேட்டை
வீரகனூர் அருகே திட்டச்சேரி கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் அழகுவேல் (வயது 19). இவர், முயல் வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு அதே பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய தாய் வளர்மதி, முயல்வேட்டைக்கு செல்லாதே என்று கூறியதாக தெரிகிறது. அப்படி இருந்தும் அழகுவேல் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.
நேற்று காலையில் அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர், அழகுவேலின் சகோதரர் நல்லமுத்துக்கு போன் செய்து அங்குள்ள மக்காச்சோள தோட்டத்துக்கு அருகில் அழகுவேல் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
கதறி அழுதனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நல்லமுத்து, வளர்மதி மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்தனர். அங்கு அழகுவேல் உடலை பார்த்து அனைவரும் கதறி அழுதனர். இதுபற்றி வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அழகுவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அழகுவேல் சாவு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரின் இரண்டு கால்களும் கருகிய நிலையில் இருந்தன. மேலும் மக்காச்சோள தோட்டத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. எனவே அழகுவேல் மின்வேலியில் சிக்கி இறந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
நண்பரிடம் விசாரணை
இருந்தாலும் மக்காச்சோள தோட்டத்தின் உரிமையாளர் பலராமன், அழகுவேலுவுடன் முயல் வேட்டைக்கு சென்ற அவருடைய நண்பர் கருப்பையா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.