அயோத்தியாப்பட்டணத்தில்லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவுநண்பர்கள் 2 பேர் படுகாயம்
அயோத்தியாபட்டணம்,
அயோத்தியாப்பட்டணத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நண்பர்கள்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (வயது 24). மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (23), மணி (23). நண்பர்களான 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பட்டி தாதனூரில் இருந்து சேலத்தை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை பூவரசன் ஓட்டினார். மணிகண்டன், மணி ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர்.
அப்போது அயோத்தியாப்பட்டணம் மார்க்கெட் அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
பலி
இதில் கீழே விழுந்த மணிகண்டனின் தலையில் லாரி சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பூவரசன், மணி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காரிப்பட்டி போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.