சூளகிரி அருகேலாரி மீது மோதி சரக்கு வேன் கவிழ்ந்தது; 25 ஆடுகள் பலி

Update: 2023-07-17 19:30 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே லாரி மீது மோதிய சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 25 ஆடுகள் துடிதுடித்து செத்தன.

சரக்கு வேன் மீது மோதியது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வெள்ளாடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த வேனை பெங்களூருவை சேர்ந்த டிரைவர் ராஜூ ஓட்டி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பகுதியில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி மீது, சரக்கு வேன் வேகமாக மோதி சாலையோரம் கவிழ்ந்தது.

25 ஆடுகள் பலி

இதில் வேனில் இருந்த ஆடுகளில் 25 ஆடுகள் துடிதுடித்து பரிதாபமாக செத்தன. மேலும் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. இவை சூளகிரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டன. மேலும் இந்த விபத்தில் சரக்குவேன் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவர் ராஜூ படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மீட்பு பணி

விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உதவியுடன் சரக்கு வேனும் தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்