மடத்துக்குளம் அருகே உள்ள சாளரப்பட்டியில் அமராவதி பிரதான கால்வாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
மடத்துக்குளம் அருகே உள்ள சாளரப்பட்டியில் அமராவதி பிரதான கால்வாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
போடிப்பட்டி,
மடத்துக்குளம் அருகே உள்ள சாளரப்பட்டியில் அமராவதி பிரதான கால்வாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அமராவதி பிரதான கால்வாய்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி ராமேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்-மகுடீஸ்வரி தம்பதியினரின் மகன் சபரீஷ் (வயது 15). துங்காவியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில தினங்களுக்கு முன் மடத்துக்குளத்தையடுத்த சாளரப்பட்டி பகுதியில் உள்ள சபரீசின் கொள்ளுப் பாட்டி இறந்ததையொட்டி நேற்று முன்தினம் காரியம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சபரீஷ் குடும்பத்தினருடன் சாளரப்பட்டி சென்றுள்ளான்.
அங்கிருந்து அன்று மதியம் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றுள்ளான். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது வாய்க்கால் கரையில் சபரீஷின் உடைகள் மற்றும் செல்போன் இருந்துள்ளது. இதனையடுத்து அச்சமடைந்த மகுடீஸ்வரி உறவினர்கள், போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பிணமாக மீட்பு
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் உறவினர்கள் அமராவதி கால்வாயில் பல கிலோ மீட்டர்கள் வரை தேடிப் பார்த்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்து கால்வாயில் நீர் திறப்பை நிறுத்தினர். ஆனால் நீரோட்டம் படிப்படியாக குறைந்த நிலையில், இரவு நீண்ட நேரமாகியும் சபரீசை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனையடுத்து நேற்று அதிகாலை முதலே உறவினர்கள் கால்வாயில் தேடத் தொடங்கினார்கள்.அப்போது சம்பவ இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் செடிகளில் சிக்கிய நிலையில் சபரீஷ் பிணமாக மிதப்பதைக் கண்டனர்.உடனடியாக சபரீஷ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்வாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.